நீர்கொழும்பு நகரம் மீன்பிடித் தொழில்துறைக்கும். உல்லாசப் பயணத் தொழில்துறைக்கும் இலங்கையில் பெயர் பெற்ற நகரமாகும். வெளிநாட்டவர்களும் இந்நகரைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள்.
நகரில் பெரும்பாலான மக்கள் இவ்விரு தொழில்துறைகளிலும் ஈடுபட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். தற்போது இவ்விரு தொழில்துறையும் பெரும் சவாலை எதிர்நோக்கியுள்ளது. இதன் காரணமாக நீர்கொழும்பு மக்களின் பொருளாதாரத்திலும் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
மீன்பிடித் தொழில்துறை
எரிபொருள் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக‚ குறிப்பாக மண்ணெண்ணெய் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக சிறிய அளவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அண்மையில் நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டமொன்றை (30.07.2007) அன்று நடத்தியதுடன்‚ வீதியை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கும்‚ மீனவர் சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் அலரிமாளிகையில் (01.08.2007) சந்திப்பொன்றும் இடம்பெற்றது. இதனை மீன்பிடித்துறை அமைச்சர் பீலிக்ஸ் பெரேரர ஏற்பாடு செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து 15.08.2007 அன்று சிறிய அளவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு எரிபொருள் மானியம் வழங்குவதற்கான (ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு) ஆரம்ப வைபவமொன்று நீர்கொழும்பு ஏத்துக்காலவிலும் நடைபெற்றது.
அதன்போது தினமொன்றுக்கு 8 ரூபர அடிப்படையில் 20 லீற்றருக்கான மானியம் மாதத்தில் 25 தினங்களுக்கு வழங்கப்படும் எனவும்‚ அதன்படி மாதமொன்றுக்கு ஆயிரம் ரூபர பெறுமதியான நான்கு மண்ணெண்ணெய் நிவாரண கூப்பன்கள் (மொத்தமாக நான்காயிரம் ரூபா) வழங்கப்படும் எனவும் அமைச்சர் பீலிக்ஸ் பெரேரர தெரிவித்தார்.
அங்கு தெரிவு செய்யப்பட்ட சிலருக்கு ஆயிரம் ரூபாவுக்கான மண்ணெண்ணெய் நிவாரண கூப்பன்கள் அமைச்சரினால் வழங்கப்பட்டன. நிகழ்வில் சிவில் விமான சேவைகள் பிரதியமைச்சர் சரத்குமார குணரட்னவும் கலந்துகொண்டார்.
“இந்த எரிபொருள் நிவாரணம் தொடர்ந்து வழங்கப்படுமா? அல்லது இதற்கு முன்னர் ஆட்டேர சாரதிகளுக்கு வழங்கப்பட்ட “பெற்றோல்” நிவாரண மானியத்திற்கு நடந்த கதி நடக்குமா? என்று மீனவாக்ள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
உல்லாசப் பயணத்துறை
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் இருக்கும் நீர்கொழும்பு நகரம் உல்லாசப் பயணத் துறைக்கு பெயர் பெற்ற நகரமாகும். பல ஆயிரக்கணக்கானோர் இத்தொழில்துறையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை நம்பி பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்கின்றன.
ஆயினும்‚ உல்லாசப் பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சியினால் நகரில் உள்ள ஹோட்டல்கள்‚ விடுதிகள்‚ பாதிக்கப்பட்டுள்ளதுடன்‚ அதில் பணியாற்றும் ஊழியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் தொழிலையும் இழந்துள்ளனர்.
முச்சக்கரவண்டி சாரதிகள்‚ வாகனங்களை வாடகைக்கு விடுவோர்‚ கலைப் பொருள்கள்‚ இரத்தினக்கல் மற்றும் ஆடை வியாபாரிகள் அங்காடி வியாபாரிகள் என பலரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். சில ஹோட்டல்கள் விடுதிகள் மூடப்பட்டுள்ளன.
நாட்டில் நிலவும் யுத்த சூழ்நிலை காரணமாகவே இந்நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
சமாதானம் நிலவவேண்டும் என்பதே இவ்விரு தொழில்துறையிலும் ஈடுபட்டுள்ளவர்களின் ஒரே எதிர்பார்ப்பாகும்.
எம்.இஸட்.ஷாஜஹான்
நீர்கொழும்பு