ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும்‚ தடியடிகளையும் பிரயோகித்து கலைத்து விரட்டியடிப்பது ஜனநாயகமாகுமா? இது ஜனநாயகம் என்கின்றனரே பொலிஸார்.
‘தருண அருண’ வேலையற்ற பட்டதாரிகள் வேலை பெற்றுத்தரும்படி அரசிடம் வற்புறுத்தி கொழும்பு டெலிகொம் கட்டடம் முன்பாக ஒரு நாளைக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த வியாழக்கிழமை 4ஆம் திகதி இரவும் விடிய விடிய அந்தப் பகுதியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ஞாயிறன்றும் தொடர்ந்து பட்டதாரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறி பொலிஸார் அவர்களைக் கலைக்க முடிவு செய்தனர்.
பொதுமக்களின் அன்றாட வாழ்விற்கு இடையூறுகளை ஏற்படுத்தி போராட்டத்தை வியாபித்ததினால்தான் ஆர்ப்பாட்டக்காரர்களை ஜனநாயக ரீதியில் கலைக்கவேண்டிய நிலை ஏற்பட்டது என்று தெரிவிக்கிறார் பொலிஸ் திணைக்களத்தின் பேச்சாளர் பிரதி பொலிஸ்மர அதிபர் ஜயந்த விக்ரமரத்ன.
பொதுமக்களுக்கு இடையூறு‚ இதுமட்டுமர பொதுமக்களுக்கு இடையூறுபோல் பொலிஸாருக்குத் தெரிகிறது. வேறு எதுவும் தெரியவில்லையா? பொலிஸார்‚ இராணுவத்தினர் ஆகியோரால் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு நெருக்குதல்கள் இல்லையா? வீண் விசாரணைகள்‚ கைதுகள்‚ சோதனைகள் ஆகியன இடையூறுகள் இல்லையா? கேட்டால் தேசிய பாதுகாப்பைக் கருதியாம். தேசிய பாதுகாப்பு என்று கூறி ஏன் பொதுமக்களை இம்சிக்கிறீர்கள்?
வேலையற்ற பட்டதாரி மாணவர்கள் தங்களது உரிமையைத்தானே கேட்கிறார்கள். ‘தருண அருண’ பட்டதாரிகளுக்கு வேலை தருவது தொடர்பாக அரச தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் ‘மஹிந்த சிந்தனை’ நிகழ்ச்சித் திட்டத்தில் உள்ளடக்கியிருப்பதுடன்‚ அவர் இதனை வெளிப்படையாகவும் தெரிவித்திருக்கிறார். அப்படியானால் ஏன் வேலை வழங்கவில்லை. அரசியல்வாதியின் பேச்சாச்சே! அது ஜனாதிபதியாக முன்புதானே! இப்போது அவர் அதிபராகிவிட்டாரே! இனி எப்படி வாக்குறுதிகளை நிறைவேற்றுவது.
அப்படியானால் மாணவர்கள் ஏமாறுவதா? அதனால்தான் கொதித்தெழுந்து போராட்டம் நடத்தவேண்டிய நிலை அவர்களுக்கு நேரிட்டது. எதற்காக? ஒழுங்காக வாக்குறுதியளித்தபடி ஜனாதிபதியாக மஹிந்த பதவியேற்றவுடன் பட்டதாரி மாணவர்களுக்கு வேலை வழங்கியிருக்கலாம்தானே! தற்போது தங்களது உரிமைகளை மீட்டெடுக்க போராட்டம் நடத்தும் மாணவர்களை விரட்டியடிப்பது (ஜனநாயக ரீதியில்) நியாயமா? நம்பி கெட்டவர்கள்தான் இவர்கள். இலங்கை மக்களே அரசியல்வாதிகளால் நம்பி கெட்டவர்கள்தானே.
மாணவர்களின் போராட்டத்தைக் கலைப்பதற்கு தண்ணீர்ப் பிரயோகிக்கும் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. முதலில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்களுக்கு பொலிஸாரினால் அறிவுறுத்தல் ஒன்று விடுக்கப்பட்டது. அது என்னவெனில்‚ பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் இந்தப் போராட்டத்தைக் கலைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது என்பதேயாகும்.
இதற்கு மறுப்புத் தெரிவித்த மாணவர்கள் மீது தண்ணீர்ப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கும் அசையாத மாணவர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதன் பின்னர் மாணவர்கள் பதறியடித்து ஓடினர். 25இற்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையிலும்‚ மயக்கமடைந்த நிலையிலும் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். 30இற்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர். வேலை கேட்டவர்களுக்கு இப்படியர வேலை கொடுப்பது. இவர்களுக்கு அரசு வேலை கொடுக்குமா? இந்தப் பிரச்சினையில் ஜனாதிபதி தலையிடுவாரா? வாக்குறுதியை நிறைவேற்றுவாரா? மாணவர்களின் போராட்டத்தை மழுங்கடிக்கச் செய்வாரா? பொறுத்திருந்துப் பார்ப்போம்.
S.Rajasegar