நுகேகொட குண்டு வெடிப்பை அடுத்து கொழும்பிலும் அதை அண்மித்த பிரதேசங்களிலும் இம்மாதம் முதலாம் இரண்டாம் திகதிகளில் பொலிஸாரும் முப்படையினரும் நடத்திய தேடுதல் வேட்டையில் வகைதொகையின்றி தமிழர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
இத்தேடுதல் நடவடிக்கையின்போது அடையாள அட்டை மற்றும் பொலிஸ் பதிவு இருந்த நிலையில் ஏராளமான அப்பாவி தமிழ் இளைஞர்கள் அடாவடித்தனமாக கைதுசெய்யப்பட்டனர். இவ்வாறு மூவாயிரத்துக்கும் அதிகமானோர் கைதாகினர். ஒருவாரம் கடந்த நிலையில் பலர் விடுவிக்கப்பட்டு 463 பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என நேற்று (டிசம்பர் 10) உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு தமிழ் இளைஞர் யுவதிகள் வகை தொகையாக கைதுசெய்யப்பட்டதை எதிர்த்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தது.
இ.தொ.கா. தொடர்ந்த வழக்கு நேற்று (டிசம்பர் 10ஆம் திகதி) விசாரணைக்கு வந்தபோதே சட்டமர அதிபர் திணைக்களம் 463 பேர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் இவர்களில் 102 பேர் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தது. எஞ்சிய 361 பேர் பொலிஸ் நிலையங்களில் மேலதிக விசாரணைகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் விளக்கமளித்தது.
பொலிஸ் நிலையங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 361 பேரை உடனடியாக நீதிமன்றங்களில் ஆஜர்செய்து பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி உயர் நீதிமன்ற நீதியரசர் பொலிஸாருக்கு உத்தரவிட்டார். அத்துடன்‚ ரொக்கப்பிணையில் விடுவிக்கப்பட்டு பணம் செலுத்த முடியாமல் தொடர்ந்து தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களை சரீரப் பிணையில் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படியும் அவர் பணித்துள்ளார்.
அரசில் அமைச்சர் பதவிகளைப் பெற்றுக்கொண்டே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருப்பது வரவேற்கத்தக்கது. பொலிஸார் மற்றும் முப்படையினரின் திடீர் சோதனைகளால் பெரிதும் பாதிக்கப்படுவது மலையக இளைஞர் யுவதிகளே. மலையக இளைஞர் யுவதிகள் அச்சம் காரணமாக தொழிலை விட்டுவிட்டு தமது சொந்த இடங்களுக்கு திரும்புகின்றனர். மலையக மக்களின் வாக்குகளை தக்கவைத்துக்கொள்வதற்காக இ.தொ.கா. இந்த வழக்கைத் தொடர்ந்திருப்பதாகவும் ஒரு சாரார் தெரிவிக்கின்றனர். இதில் உண்மை இல்லாமலுமில்லை.
எஸ். கணேசன்