உலக மீனவர் தினத்தையிட்டு தேசிய மீனவ ஒத்துழைப்புப் பேரவையும் உலக மீனவ மக்கள் சம்மேளனமும் ஏற்பாடு செய்திருந்த மாபெரும் எதிர்ப்புப் பேரணியும்‚ எதிர்ப்புக் கூட்டமும் 28-11-2007 அன்று நீர்கொழும்பில் நடைபெற்றது. இதில்‚ ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
உலக மீனவ தின வைபவத்தை நடத்தி விவசாய‚ மீனவ‚ தொழிலாளர்‚ தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தைப் பலப்படுத்துவோம் எனும் தொனிப்பொருளின் கீழ் எதிர்ப்புப் பேரணியும் கூட்டமும் நடைபெற்றது.
வடக்கு தவிர்த்து நாட்டின் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளும் இந்தப் பேரணியில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
ஊடக அடக்குமுறைக்கான இயக்கம் கலந்துகொண்டு ஊடக அடக்குமுறைக்கு எதிராக எதிர்ப்புக் கோஷம் எழுப்பியவாறு சென்றமை குறிப்பிடத்தக்கது. இதில் நாட்டின் அனைத்து பாகங்களிலும் இருந்து வந்த ஊடகவியலாளர்களும் பிரதேச ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டனர்.
எதிர்ப்புப் பேரணியிலும் கூட்டத்திலும் நீர்கொழும்பு ஸ்ரீ விமுக்தி மீனவ பெண்கள் அமைப்பு (கடோல்கலே)‚ ஸ்ரீ லங்கர மீனவ பெண்கள் அமைப்பு (பிடிப்பனை)‚ நன்னீர் மீனவ கூட்டுறவுச் சங்கம் (அங்கமுவ)‚ பிரஜர சக்தி அபிவிருத்தி மன்றம் (கருவலகஸ்வேவ)‚ சூரியகாந்தி சங்கம் (திருகோணமலை)‚ தென் மாகாண மீனவர் சங்கம் (மாத்தறை)‚ லூர்மாதர மீனவர் சங்கம் (தலவில)‚ கிராமிய பெண்கள் முன்னணி‚ பொதுமக்கள் திட்டவமைப்பு ஆணைக்குழு‚ சமூக நிதிக்கான பெண்கள் நடவடிக்கை‚ சவிஸ்திரி‚ தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம்‚ மாவட்ட மீனவ பேரவை‚ உலக மீனவ மக்கள் சம்மேளனம் ஆகிய அமைப்புகளுடன் நாட்டின் பல பாகங்களிலும் இருந்து வருகை தந்த பல்வேறு அமைப்புக்களையும் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
இவர்கள் பல்வேறு சுலோகங்களையும் கைகளில் ஏந்தியிருந்ததோடு எதிர்ப்புக் கோஷங்ளையும் எழுப்பினர்.
“மீன்பிடி அமைச்சரே எங்களை ஏமாற்றாதீர்”‚ “எரிபொருளுக்கான வரியை குறை”‚ “மீன்பிடி என்ஜின் தடையை நீக்கு”‚ “மீன்பிடி உபகரண விலைகளை குறை”‚ “மீன்பிடித் தடையை நீக்கு”‚ “விலைவாசியை குறை”‚ “அத்தியாவசிய பொருட்களின் விலையை குறை”‚ “தோட்டத்தொழிலாளர்களினதும் அரசாங்க ஊழியர்களினதும் தனியார் துறையினரதும் சம்பளத்தை அதிகரிக்கவும்” ஆகிய சுலோகங்களை ஏந்தியிருந்ததுடன் கோஷங்களையும் எழுப்பினர்.
அத்துடன்‚ “சுனாமிப் பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக தீர்வை வழங்கு”‚ “தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தையை விரைவில் ஆரம்பிக்கவும”்‚ “இலங்கை வாழ் மக்களி்ன் மந்த போஷனைக்கு விரைவில் தீர்வு வேண்டும”்‚ “இலங்கையில் உழைக்கும் மக்களின் உரிமையை வென்றெடுப்போம்”‚ “யுத்தத்திற்கு‚ அடக்குமுறைக்கு‚ பட்டினிக்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்போம”்‚ “நீர்கொழும்பு களப்பை நாசப்படுத்துவதை உடனடியாக நிறுத்தவும்” ஆகிய வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.
பேரணி பிற்பகல் 12.30 மணிக்கு நீர்கொழும்பு தெல்வத்தை சந்தியில் ஆரம்பித்து கொழும்பு வீதி‚ பிரதான வீதி‚ ராஜபக்ஷ வீதி வழியாக வந்து கடோல்கலே மைதானத்தை பிற்பகல் 2.30 மணியளவில் வந்தடைந்தது.
அங்கு பிற்பகல் 3 மணியளவில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உலக மீனவ மக்கள் சம்மேளனத்தின் உள்நாட்டு‚ வெளிநாட்டு பிரதிநிதிகளும் பல்வேறு தொழில் துறையைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். அங்கு பாடல்களும்‚ சிரேஷ்ட உரைகளும் இடம்பெற்றன.
எம். இஸட். ஷாஜஹான்
நீர்கொழும்பு