படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையில் இடம்பெற்ற மோதலில் வெலிஓயவில் கொல்லப்பட்ட இராணுவச் சிப்பாயின் சடலம் கண்டி‚ கிரிமெடிய தோட்டத்துக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து பெரும்பான்மையின இளைஞர்கள் குழுவொன்று அத்தோட்டத்திலுள்ள தமிழ் தோட்டத்தொழிலாளர் வாழும் லயன் அறைகளுக்குச் சென்று அச்சுறுத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இதனால்‚ அப்பகுதியில் வாழும் தோட்ட தமிழ் மக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர் என அறியமுடிகிறது.
கண்டி மாவட்டத்தின்‚ யட்டிநுவர தேர்தல் தொகுதியில் உள்ள கிரிமெடிய தோட்டத்தில் சிங்களவர்களே பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இந்தப் பகுதியில் பெரும்பாலான சிங்கள இளைஞர்கள் இராணுவத்தில் இணைந்துள்ளனர். இதில்‚ ரத்னவீர நிலன்த குமார என்பவர் வெலிஓய பகுதியில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்துள்ளார். இவரின் சடலம் கிரிமெடிய தோட்டத்துக்கு கொண்டுவரப்பட்டது.
இதனையடுத்து‚ கொதித்துப்போன குறித்த சுமார் 15 பேரைக் கொண்ட இளைஞர்கள் குழுவொன்று சிப்பாயின் சடலம் சனிக்கிழமை புதைக்கப்படவிருந்த நிலையில் வெள்ளிக்கிழமை (23.02.2008) இரவு 12.00 மணிக்கு தமிழர்களின லயன் அறைகளுக்கு ஆயுதங்கள் சகிதம் வந்து பெரும் சத்தத்துடன் கூச்சலிட்டுள்ளனர். “தமிழர்கள் அனைவரையும் கொல்லவேண்டும். எல்லோரும் வெளயே வா” என்றவாறு வீட்டின் கதவுகளைத் தட்டியுள்ளனர். இந்தக் குழுவைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் இராணுவத்திலிருந்து தப்பியோடிவந்தவர்களாவர்.
இதனால்‚ அச்சமுற்ற தமிழர்கள் பொலிஸாரின் அவசர அழைப்பான 119இற்கு தொடர்பு கொண்டு தெரிவித்தபோதும் எந்தவிதப் பயனும் ஏற்படவில்லை. அழைப்பு விடுத்தபோது தாங்கள் கூடிய விரைவில் வருகிறார்கள் என்றுதான் பொலிஸார் தெரிவித்தனர் என்றும்‚ ஆனால்‚ யாரும் வரவில்லை என்றும் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பவ தினத்தன்று வராத பொலிஸார் அடுத்தநாள் சனிக்கிழமை காலை வந்து இது குறித்து தமிழ் மக்களிடம் கேட்டறிந்துள்ளனர். பாதுகாப்பிற்காக அடுத்தநாள் இரண்டு பொலிஸார் கிராமத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தையடுத்து தமிழ் மக்கள் வன்முறைகள் வெடிக்கும் என்று அச்சத்துடனும் பீதியுடனும் வாழ்ந்து வருகின்றனர்.
இதற்கு முன்னரும் பல தடவைகள் சிங்கள இளைஞர்கள் தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதன்போதும் பொலிஸார் தோட்டப்பகுதிக்கு வந்து விசாரணை நடத்திவிட்டு சென்றுள்ளனர். ஆனால்‚ மீண்டும் அதே இளைஞர்கள் இவ்வாறு நடந்துகொள்வதற்கு பொலிஸாரே காரணமாக அமைந்துள்ளனர்.