எனது மனைவியின் தேசிய அடையாள அட்டை காணாமல் போய்விட்டது. அதனை கண்டெடுத்தவர்கள் யாராவது தபாலில் அனுப்பிவைப்பார்கள் அல்லது கொண்டு வந்தாவது தருவார்கள் என்று எதிர்பார்த்திருந்து ஏமாற்றம்தான் கிடைத்தது. இனி புதிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பதே ஒரே வழி என நானும் மனைவியும் தீர்மானித்தோம்.
தேசிய அடையாள அட்டையில்லாமல் வெளியில் செல்வது மட்டுமன்றி வீட்டில் இருப்பது கூட இன்று அபாயகரமானதொரு விடயம் என்பது சிறுபிள்ளைக்குக் கூட தெரியும். அதனால்‚ அடையாள அட்டை காணாமல் போனமை தொடர்பாக முறைப்பாடு செய்வதற்காக இருவரும் பொலிஸ் நிலையம் சென்றோம். (இது நடந்தது 09.08.2007 அன்றாகும்.)
நாட்டில் வடக்கு-கிழக்கு தவிர்ந்து தமிழில் பொலிஸ் முறைப்பாடு செய்வதற்கான ஒரே ஒரு தமிழ்மொழி முறைப்பாட்டுப் பிரிவு நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில்தான் இருக்கிறது என்று நான் என் மனைவியிடம் பெருமையாகக் கூறிக்கொண்டு சென்றேன்.
தமிழ் மொழியிலான முறைப்பாட்டுப் பிரிவுக்குச் சென்று அங்கு பொறுப்பாக இருந்த பொலிஸ் அதிகாரியிடம் வந்த விடயத்தை தெரிவித்தபோது அவர் அதனை மனிதாபிமானத்தோடு விசாரித்துவிட்டு சிறு முறைப்பாடுகள் பிரிவுக்குச் சென்று முறைப்பாடு செய்து முறைப்பாடு பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு கூறினார். மனைவி என் முகத்தைப் பார்த்தாள். பின்னர் இருவரும் சிறு முறைப்பாடுகள் பிரிவுக்குச் சென்று சிங்கள மொழியில் முறைப்பாட்டினைச் செய்தோம்.
பொலிஸ் நிலைய தகவல் புத்தகத்தின் உண்மைப் பிரதியைப் பெற்றுக்கொள்வதற்காக தொடர்ந்து காத்திருந்த வேளையில் பொலிஸ் நிலையத்தில் இருந்த மண்டபமொன்றில் பல சிறுவர்கள் இருப்பதைக் கண்டேன். அவர்கள் தமிழில் கதைப்பதையும் நான் அவதானித்தேன். அதுபற்றி அங்கிருந்த பொலிஸ் கான்ஸ்டபிளிடம் வினவியபோது‚ நீர்கொழும்பு கிம்புலாபிட்டியவில் உள்ள பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து தாங்கள் இந்த சிறுவர்களை மீட்டு வந்தார்கள் என்று அவர் கூறினார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. கிம்புலாபிட்டிய கிராமம் நீர்கொழும்பு பிரதான பஸ் நிலையத்திலிருந்து பத்து பன்னிரண்டு கிலோமீற்றர் தூரத்தில் உள்ள பெரும்பான்மையினர் வாழும் கிராமமாகும். அங்குள்ள பட்டாசு தொழிற்சாலையில் தமிழ் சிறுவர்களா?
இதுபற்றி மேலும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக சிறுவர்கள் இருந்த மண்டபத்திற்குச் சென்று அங்கிருந்த பொலிஸாரிடம் என்னை (ஊடகவியலாளர்) அறிமுகப்படுத்திவிட்டு விபரங்களைக் கேட்டறிந்தேன்.
14 வயதுக்கு மேற்பட்ட 29 சிறுவர்கள் அங்கிருந்தார்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர். அவர்களோடு ஒரு தமிழ் பெண்மணியும் (நடுத்தர வயது) இருந்தார். 29 சிறுவர்களில் 28 சிறுவர்கள் வவுனியாவின் மதவாச்சி பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர். அவர்களில் 23 ஆண்களும்‚ 6 பெண்களும் இருந்தனர். இவர்கள் அனைவரும் பூரண விசாரணையின் பின்னர் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படுவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
எனக்கு அங்கிருந்த சில சிறுவர்களைப் பார்த்தபோது 14 வயதுக்குக் குறைவானவர்கள் போல் தோன்றியது. பொலிஸாரின் அனுமதியோடு அங்கிருந்த 17 வயது மதிக்கத்தக்க சிறுமியொருவரிடம் இதுபற்றி விசாரித்தபோது அவர் இவ்வாறு கூறினார் –
நாங்கள் வவுனியா-மதவாச்சி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். பலகாரம் தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலையிருப்பதாகவும்‚ மாதம் 5 ஆயிரம் ரூபர சம்பளம் தருவதாகவும் கூறி சிலர் இங்கு அழைத்து வந்து பட்டாசு தொழிற்சாலையில் வேலைக்கு அமர்த்தினார்கள்.
எங்களுக்கு தங்குமிட மற்றும் அடிப்படை வசதிகள் கிடையாது. நாங்கள் வேலைக்குச் சேர்ந்து இரண்டு மாதகாலமாகிறது. இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை. 5 ஆயிரம் ரூபர சம்பளம் வழங்குவதாகக் கூறி சிலருக்கு 2 ஆயிரம் ரூபாவை வழங்கியுள்ளார்கள். எமது பெற்றோர்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட பேச முடியாது. பெற்றோர் எம்மோடு தொடர்புகொண்டு பேசினால் முதலாளி அதனை பெரும்பாலும் தவிர்த்துவிடுவார். சிலவேளை பேச அனுமதித்தால் நாம் என்ன பேசினோம் என்பதை அவருக்குக் கூறவேண்டும். – என்றார் அவர்.
அந்த அப்பாவிச் சிறுவர்களை பார்த்தபோது எனக்கு பரிதாபமாக இருந்தது. அவர்கள் ஒவ்வொருவரையும் விசாரிக்கக் கிடைத்திருந்தால் பல விடயங்கள் அறிந்திருக்க வாய்ப்பிருந்திருக்கும். முறைப்பாட்டுப் புத்தகத்தின் உண்மைப் பிரதி கிடைத்தவுடன் மனைவியோடு பொலிஸ் நிலையத்தை விட்டு வெளியே வந்தேன்.
எனக்கு பலநூறு கேள்விகள் எழுந்தன. சிறுவர்களை வேலைக்கு அமர்த்த வேண்டாம் என்று சட்டம் கூறுகிறது. சிறுவர்களை இயக்கங்களில் சேர்க்கக்கூடாது என்று அரசு உட்பட பல வெளிநாடுகளும்‚ சிறுவர் அமைப்புகளும் சிறுவர் உரிமை தொடர்பான பல்வேறு சர்வதேச சட்டங்களும் கூறுகின்றன.
ஆனால்‚ தெற்கில் உள்ளவர்கள் வடபகுதியைச் சேர்ந்த‚ மலையகத்தைச் சேர்ந்த தமிழ் சிறுவர்களை தாராளமாகவே தமது வீடுகளிலும்‚ தொழிற்சாலைகளிலும்‚ கடைகளிலும் வேலைக்கு அமர்த்தியுள்ளார்கள்.
இங்கே பட்டாசு தொழிற்சாலையில் இருந்து அந்த சிறுவர்களை மீட்பது அவர்கள் சிறுவர்கள் என்பதற்காகவா? அவர்கள் தமிழ் சிறுவர்கள் என்பதற்காகவா? நாட்டின் பாதுகாப்பு கருதியா? அந்த சிறுவர்கள் அனைவரும் சிங்கள அல்லது முஸ்லிம் சிறுவர்கள் என்றால் பொலிஸார் அவர்களை மீட்டிருக்கமாட்டார்களா? அந்த சிறுவர்களின் உண்மையான வயது என்ன?
இன்னும் இது போன்ற பல கேள்விகள் எழுந்தன. தொழிலாளர்களை ஊறிஞ்சும் முதலாளிப் பேய்களிடமிருந்து சிறுவர்களை மட்டுமல்ல நாட்டில் உள்ள எல்லர தொழிலாளர்களும் மீட்கப்பட வேண்டும்.
யார் வந்து மீட்பார்கள இவர்களை?
எம். இஸட். ஜஹான்